வடக்கில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: சிரமத்திற்குள்ளாகிய நோயாளிகள்
நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (02) 04 மணி நேரம் தமது சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேற்று(01) இடம்பெறவிருந்த கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சானக தர்மவிக்கிரம தெரிவித்திருந்தார்.
அதற்கமைய வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
180 சிற்றூழியர்கள் பணிப் புறக்கணிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (02) தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 180 வரையான சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
காலை 6:30 மணி தொடக்கம் 10 மணி வரை இவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் குறித்த நேரப் பகுதியில் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.
ஆர்ப்பாட்டப் பேரணி
அத்துடன் வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (02) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று மதியம் ஆரம்பமான குறித்த பேரணி யாழ் வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை அடைந்து நிறைவுபெற்றது.
இந்த நிலையில் “எமது கோரிக்கையினை அரசாங்கம் செவிமடுக்காது விடில் நாளையதினத்திலிருந்து தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தாயாராகிவருகின்றோம்” என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |