தாய்லாந்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்: சிரமத்தில் மக்கள்
தொடர்ச்சியாக 48 மணிநேரம் பெய்த கனமழையால் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நகரம் முழுவதும் வெள்ள அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாங்கொக்கின் 50 மாவட்டங்களும் அவசர நிலை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நகரின் கால்வாய்களுக்கு அருகில் வசிப்பவர்கள் தங்களது உடைமைகளை வீடுகளின் மேல் தளங்களுக்கு மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புகள் பதிவாகவில்லை
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நகரின் வடிகால் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், மேலும் பல கால்வாய்கள் நிரம்பி கரைபுரளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்கொக்கின் கிழக்குப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அவற்றை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தைக் காட்டிலும் தற்போதைய வெள்ள நிலைமை மோசமாக இருப்பதாக பாங்கொக்கில் கால்வாய் அருகே வசிக்கும் 67 வயதுடைய முதியவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், தற்போதைய வெள்ளத்தால் பாங்கொக்கில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |