நல்லூரில் குவிந்த மக்கள் : உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்திற்கு அஞ்சலி
புதிய இணைப்பு
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன்போது ஈகைச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம் மற்றும் வல்லிபுரம் செல்வராணி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அத்துடன் தியாக தீபம் உண்ணா நோன்பிருந்த நல்லூர் ஆலய வீதியில் ஈகைச் சுடரினை இரு மாவீரர்களின் சகோதரியான சுப்பிரமணியம் மலர்விழி ஏற்றி வைத்தார்.
மலர் தூவி அஞ்சலி
அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் நினைவாலயத்தில் உள்ள தியாக தீபத்தின் திருவுருவச் சிலைக்கு மாவீரரின் தந்தையான மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, திருவுருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை இன்றைய தினம் இளைஞன் ஒருவர் தூக்கு காவடி எடுத்து வந்து தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் ஏனைய பாகங்களில் இருந்தும், கிளிநொச்சியில் இருந்தும் தியாக தீபத்தின் திருவுருவ படங்கள் தாங்கிய ஊர்திகள் நினைவாலயத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - த.பிரதீபன்
முதலாம் இணைப்பு
திலீபனின் இல்லத்திலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான நினைவூர்திப் பவனி!
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான12 ஆம் நாள் இன்றாகும்.
அந்த வகையில் இன்று காலை திலீபனின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் - ஊரெழுவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நினைவூர்திப் பவனி பேரெழுச்சியுடன் புறப்பட்டு நல்லூர் நினைவாலயம் நோக்கி நகர்கின்றது.

ஊரெழு மண்ணில் சுடரேற்றியும் மலரஞ்சலி செலுத்தியும் மக்கள் தங்களது இறுதிக்கட்ட நினைவேந்தலைச் செலுத்தி வருகின்றனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊரெழுவில் இருந்து புறப்பட்ட நினைவூர்திப் பவனி நல்லூரில் உள்ள திலீபன் நினைவாலயத்தை வந்தடைந்து அங்கு தியாக தீபம் இவ்வுலகை விட்டு பிரிந்த நேரமான காலை 10:48 மணிக்கு முதன்மை ஈகைச்சுடர் ஏற்றப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



