கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவான பிரதேசம் : விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (5) காலை அவர் வெளியிட்ட அறிக்கையொன்றிலே இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் 125 மில்லி மீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கங்கைகளின் நீர்மட்டங்களில் அதிகரிப்பு
எனினும், ஏனைய பல பிரதேசங்களில் சாதாரண மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாகவும், கங்கைகளின் நீர்மட்டங்களில் பெரிய அதிகரிப்பைக் காட்டவில்லை என குறிப்பிட்ட அவர் ஏனைய பிரதேசங்களில் மழை பெய்யாததனால் கங்கைகளின் நீர்மட்டங்களில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குளங்கள் கட்டமைப்பில் அபாயகரமான வான் பாயும் நிலைமை இல்லை எனவும், பல குளங்கள் வான் மட்டத்திலோ அல்லது சாதாரண அளவிலோ வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும், அதனால் எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப அந்தந்த கங்கைகளின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.
ஆகவே அச்சமடைவதைத் தவிர்க்குமாறும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தவிர வதந்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |