நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் மழை மற்றும் காற்றுடன் நானுஓயா பகுதியில் பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது.
இன்று (20) காலை முதல் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பிரதான வீதிகளின் பயணிக்கும் வாகனங்கள் மெதுவாகவும், முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாகன சாரதிகள்
குறிப்பாக நுவரெலியா, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் பனி மூட்டத்தின் தாக்கம் புகைபோல் நீடித்து வருகிறது.
இதனால் குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (20) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் சுயமாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நீர்த்தேக்க அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்து பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
