கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம்
மன்னார் மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேக்கம் கிராமத்தில் வாழ்ந்துவரும் 44 குடும்பங்களுக்கும் நேற்றைய தினம் உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்த கொவிட் 19 தொற்றுக்களால் நாடளாவிய ரீதியில் கடந்த ஆறுவார காலத்துக்கும் அதிகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தார்கள்.
எனினும் தற்போது நாடளாவிய ரீதியில் பயணத்தடை நீக்கப்பட்டாலும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் தினக்கூலிகள் தொழிலிழந்தும் அன்றாடம் காட்சிகளாகவும் வாழும் ஏழை மக்கள் அன்றாட உணவுக்கு அல்லல்படும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் பேரிடர் காலத்தில் அரசாங்கம் அறிவிக்கும் திட்டங்களும், உதவிகளும் மக்களில் பெரும்பாலானோருக்கு சென்றடைவதில்லை.
குறிப்பாக தமிழர் தாயக பிரதேசங்களில் இப்பிரச்சனை அதிகமாக உணரப்பட்டிருக்கிறது. இவ்வாறு கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
தாயக மக்கள் பேரிடர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் ஒரு சில நல்லுள்ளம் கொண்ட குழுக்கழும் என பலர் களத்தில் இறங்கி மக்களின் துயர் துடைத்து வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக, மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றான தேக்கம் எனும் பகுதியில் மிகவும் வறியநிலையில் வாழும் 44 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு குறித்த பகுதிகளின் கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளினூடாக உலருணவுப்பொருட்கள் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உலருணவுப்பொருட்களானது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த (கொக்கு-பெயர் மாற்றப்பட்டுள்ளது) புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் ஒரு சிலர் நண்பர்களாக ஒன்றிணைந்து விபத்தில் காலமான தமது நண்பரின் சார்பில் வழங்கி வைத்துள்ளனர்.
சமூக இடைவெளிகளைப் பேணி குறித்த உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.