பிரதமர் செயலகம் மறைத்த உண்மையை அம்பலப்படுத்திய அரசதலைவர் செயலக அதிகாரி
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு அரச தலைவர் தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்த கருத்து பொய்யானது என அரச தலைவர் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரொஹான் வெலிவிட்டவின் கருத்து தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த குறித்த அதிகாரி, நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு பதவி விலகுமாறு அரச தலைவர் மகிந்தவிடம் விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் சாதகமாக பதிலளித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு 50 வருடகால அரசியல் அனுபவம் உள்ளதாகவும், நாட்டின் நிலைமையை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரச தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச தலைவரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அமைச்சர்களான கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும், பிரதமர் பதவி விலகுவதால் எவ்வித பயனும் ஏற்படாது என அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவரது குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் இராஜினாமா செய்தவுடன் அமைச்சரவை கலைக்கப்படவுள்ள நிலையில் அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அலரிமாளிகைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியபோது, பிரதமர் பதவி விலகினாரா ?, இராஜினாமா செய்வாரா? இல்லையா ? என்பது தனக்குத் தெரியாது, எப்போது இராஜினாமா செய்வார் எனவும் தனக்கு தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் ஊடக பிரிவு பிரதமரிடம் வினவிய போது தான் பதவி விலகவில்லை என மாத்திரம் அவர் குறிப்பிட்டுள்ளார் என ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
