இலங்கை திரும்பிய சுவிஸ் தூதருக்கு அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவன அதிகாரிகள்
இலங்கைக்கான (Sri Lanka) சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பாளர் (OIC), மற்றொரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு பூட்டு திறக்கும் தொழிலாளி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுவிஸ் தூதர் ஏப்ரல் 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு (Switzerland) பயணித்து ஏப்ரல் 27ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.
மேற்கொண்ட விசாரணை
இதன்போது, வீட்டில் ரூபாய் 4.5 மில்லியன் மதிப்புள்ள தங்க மோதிரங்கள் மற்றும் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் என்பவை காணாமல் போயுள்ளதை அவர் கண்டறிந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 29 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி (Kollupitiya) காவல்துறையில் அவர் அளித்த முறைப்பாட்டின் படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி மேற்கொண்ட விசாரணையில், தூதர் இல்லத்திலுள்ள உள்ள நகைகளை சட்டவிரோதமாக நகல் செய்யபட்ட ஒரு சாவியை பயன்படுத்தி திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்பின், குறித்த சாவியை தயாரித்த பூட்டுத் தொழிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இதனை தொடர்ந்து வெலிகமாவில் உள்ள ஒரு பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்து திருடப்பட்ட நகைகளில் சில மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருட்டு நடந்த நேரத்தில் வீட்டில் இரண்டு பெண் வேலைக்காரர்கள் மற்றும் ஒரு சமையல்காரர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இவர்களை காவல்துறையினர் விசாரித்த பின்னர் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமையினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின், குறிப்பிட்ட தனியார் நிறுவனமொன்றின் பொறுப்பாளர் உட்பட மூன்று நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மே 22 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
