100 கிராமுக்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதானவர்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு
100 கிராமுக்கும் குறைவான (மொத்த எடை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் பிணை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று(15) தெரிவித்தார்.
தடயவியல்அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களால் சந்தேக நபர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்குத் தீர்வாகவே, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தத் திருத்தம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ள தடயவியல் அறிக்கை
பத்தரமுல்லையில் உள்ள அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தடயவியல் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் ஒரு பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 பணியிடங்கள் வெற்றிடமாக இருந்ததாகவும், இதனால் தடயவியல் அறிக்கைகளைத் திறம்பட வெளியிடுவதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன்பின்னர் சுமார் 70 பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கைகளைத் தயாரிப்பதை விரைவுபடுத்த அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் பிணை கோரும் வசதி
போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான தடயவியல் அறிக்கைகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். 2022 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், 10 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) பிணை கோர வேண்டியிருந்தது; இதனால் பிணை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்படும் நேரத்தில் போதைப்பொருட்களின் நிகர எடை 100 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்றத்தில் பிணை கோரும் வசதியை இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் மீண்டும் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |