இலங்கையை பல்கலைக்கழகங்களுக்கான கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் : ரணில்
நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம் தேவையாக உள்ளதோடு, இலங்கையில் பல்கலைக்கழகத்துறை மற்றும் தொழில் பயிற்சித் துறையின் மீது அந்த பொறுப்பு சார்ந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
நாட்டின் அபிவிருத்தி
“பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்.
தொழிற்பயிற்சி கல்வித்துறையின், புதிய மாற்றத்திற்கு தனியார் துறையினரின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது, நாட்டின் முழு கல்வி முறையையும் மறுசீரமைப்பதற்கு தேவையான சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும்.
பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் தொழில் கிடைக்கும் வகையில் பல்கலைக்கழக கல்வி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தற்போது அரச பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நிதி ஒதுக்குவதில் உள்ள சிக்கல்தான் அதற்குக் பிரதான காரணமாகும். ஆனால் மற்ற நாடுகள் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன.
இந்தநிலையில், நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்று மடங்கினால் அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம். அதனால் புதிய தொழில்நுட்ப கல்வியுடன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.
கேந்திர நிலையம்
இலங்கையை பல்கலைக்கழகங்களுக்கான கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும். 2030 ஆம் ஆண்டளவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் ஏனைய மொழி அறிவிலும் தன்னிறைவான மாணவச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
அதேபோல் தொழில் பயிற்சி நிறுவனங்களை ஒன்றிணைத்து தொழில் பயிற்சி பல்கலைக்கழகங்களை நிறுவ எதிர்பார்ப்பதோடு, தொழில் வாய்ப்புக்களை இலக்கு வைத்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்.
அதற்கு தனியார் வர்த்தகச் சங்கமும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதால் அடுத்த வருடத்திலிருந்து இந்ததிட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |