பிரித்தானியாவில் இந்து முஸ்லிம்களுக்கிடையே மூண்டது கலவரம் - இந்து ஆலயம் மீது மர்மக் கும்பல் அட்டகாசம்!
பிரித்தானியாவில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லீசெஸ்டர்ஷையர் நகரத்தில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்து ஆலயம் மீது தாக்குதல்
இவ்வாறான நிலையிலேயே அங்கு அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.
அதனையடுத்து அப்பகுதியில் லீசெஸ்டர்ஷையர் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் கைது
இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவருக்கு 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லீசெஸ்டர்ஷையரில் ஏற்பட்ட குழப்பத்தின் போது அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்திய போதிலும், குற்றம் பற்றிய மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆயுதங்களுடன் கைது
அமைதியின்மையைச் சமாளிக்கும் காவல்துறையின் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பர்மிங்காம் உட்பட நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வன்முறை, பொதுவான தாக்குதல், ஆயுதம் வைத்திருந்தல் மற்றும் வன்முறை சீர்குலைவு உள்ளிட்ட பல குற்றங்களுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கூடுதலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்துக் கோவில் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
