ஒரு பெண்ணின் மரியாதைக்காக தேசிய தலைவர் எடுத்த வரலாற்று முடிவு
இலங்கையில் இன்று விவாதப்பொருளாக மாறியுள்ள சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் மீதான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு, சர்வதேச ஊடகங்களாலும் கவனிக்கப்பட்டுவரும் விடயமாக மாறியுள்ளது.
இதற்கு பிரதான காரணமாக, தற்போதைய அரசாங்கம் நீதித்துறையை எவ்வாறு கையாள்கிறது என்பதை விளக்குவதற்கும், இலங்கையில் பெரும்பான்மையின மதத்தின் ஆதிக்கம் இவ்வாறான விவகாரங்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற விமர்சனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் முயற்சிகளே அமைந்துள்ளன.
இலங்கையைப் பொறுத்தமட்டில், கலாசார ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பெண்களுக்கான கௌரவம் என்பது புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் சில சம்பவங்கள் அவற்றை கேள்விக்குட்படுத்துகின்றன.
புத்த போதனைகளில் உருவான பௌத்தத்தின் புனிதம், அண்மைக் காலங்களில் அடிக்கடி கரும்புள்ளிகளால் களங்கப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது. இது காவி உடைக்குள் மறைந்துள்ள சில போலி முகத்திரைத் துறவிகளால் அவமதிப்புக்குள்ளாகிறது.
ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் பெண்களுக்கு வழங்கிய கௌரவத்தை, இன்றைய சிறிலங்கா இராணுவத்திலும் பாதுகாப்புத் துறையின் உயர்மட்டங்களிலும் உள்ள சில தலைவர்கள் கூட பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும் என அவர்கள் விளக்கியுள்ளனர்.
யுத்தக் காலத்தில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், அந்த இராணுவ வீரர் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்காக அவரது சிங்கள மனைவி, புலிகள் இயக்கத் தலைவருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்,
“என் கணவருடன் நான் ஒன்றாக இருந்தேன் என்பதை உலகம் நம்புமா? இந்தச் சூழ்நிலையில் நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால், என் மீது ஊரார் தவறான அவதூறுகளை பேசுவார்கள்,”
என அந்தப் பெண் தனது இயலாமையையும் பயத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தப் பிரச்சினை சாதாரணமானதல்ல என்பதை உணர்ந்த தலைவர் பிரபாகரன், அந்தப் பெண்ணின் கற்பையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒரு வரலாற்றுத் தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
அப்பெண், அவரது மாமியார் மற்றும் அவர்களின் கிராமத்தைச் சேர்ந்த பௌத்த மதகுரு ஆகிய மூவரும் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டனர். தலைவரின் ஏற்பாட்டின்படி, அந்தச் சிங்கள இராணுவ வீரரும் அங்கு அழைத்துவரப்பட்டு, தனது மனைவி மற்றும் பௌத்த மதகுருவின் முன்னிலையில், “தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதான்” என ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.
விசாரணைக்குப் பின்னர், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், அந்தச் சிப்பாயும் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விடயம், உலக அரசியல் அல்லது இராணுவ வரலாற்றில் அரிதாகக் காணப்படும் ஒரு தீர்ப்பாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறான மத, இன சார்பற்ற அணுகுமுறையைக் கொண்ட தீர்ப்பை தேசியத் தலைவர் வழங்கியமை, அவரது தலைமையின் தன்மையை எடுத்துக்காட்டுவதாக தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் எழுதிய ஒரு நூலிலும் விளக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, தற்போது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் தேரருக்கு எதிராக, அநுர அரசாங்கம் சரியான நீதியை வழங்குமா என்பதே இலங்கை சமூகத்தின் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |