விடுதலை புலிகள் காலத்தில் கூடப் பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடந்தன! அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல்
விடுதலை புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் உண்மையான விருப்ப நிலையை அறிந்துகொள்ள விரும்பினால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்துக்கணிப்பு அறிக்கைகளைப் பெறுவதைத் தவிர்த்து உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கணிப்பு அறிக்கை
அரசாங்கம் பணம் கொடுத்துச் செய்யும் கருத்துக்கணிப்பு அறிக்கைகளிலேயே நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதியை எத்தனை சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
இருப்பினும், ஒரு கட்சியாக நாங்கள் எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.
குழுக்களின் அச்சுறுத்தல்
வழக்கறிஞர்கள் சங்கம் (BASL), பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கம், ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்திற்கும் எதிராக அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவந்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைத்தால் அது பெரும் தவறாகும்.
வரலாற்றில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கு நேர்ந்த கதியைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி கலாச்சாரப் பெரஹராக்களைத் தீர்மானிக்கக் கூடாது.
விடுதலைபுலிகள் மற்றும் ஜே.வி.பி அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியிலும் வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டன.
எதிர்காலக் கூட்டணிகள்
எனவே, ஊர்வலத்தில் பங்கேற்கும் நடனக் கலைஞர்கள், யானைகள், நிலமேக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாங்கள் மறைமுக அரசியல் செய்யமாட்டோம், எதிர்காலக் கூட்டணிகள் குறித்து யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்தினால் அதை வெளிப்படையாகவே செய்வோம்.

தனிநபர்களின் தேவைகளுக்காக அன்றி, நாட்டின் மற்றும் மக்களின் நலன்களுக்காக மட்டுமே கூட்டணிகள் அமைக்கப்படும்.
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றவர்களையும், புதிதாக இணைந்தவர்களையும் பாதுகாத்து நாட்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலுவானதொரு அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதே எனது முதன்மைப் பொறுப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |