உலகப் புகழ் பெற்ற பாடகி யொஹானிக்கு இலங்கை நாடாளுமன்றில் கிடைக்கவுள்ள உயரிய மரியாதை
“மெனிகே மகே ஹிதே” என்ற பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற இளம் பாடகி யொஹாணி டி சில்வாவுக்கு இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், யொஹாணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பார்.
விசேட வரவேற்பு உரையை இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நிகழ்த்துவார். பின்னர் பிரதமர் பரிசு வழங்குவார்.
இதேவேளை, யொஹாணி டி சில்வாவின் சார்பில் நாடாளுமன்றத்தில் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.