வடமத்திய மாகாணத்தில் அரசியல்வாதிகளின் அத்துமீறல்: அரசாங்க தரப்பு கண்டனம்
வடமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள 23 குளங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சில அரசியல்வாதிகள் நீச்சல் குளங்களுடன் கூடிய ஹோட்டல்களை கட்டியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற அநுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் நடந்த 23 குளங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை துல்லியமாகக் குறிக்க நீர்ப்பாசனத் துறையும் நில அளவைத் துறையும் ஒரு கூட்டுத் திட்டத்தைத் தொடங்க உள்ளன.
முறையான விசாரணை
முதல் படி அநுராதபுரத்தில் உள்ள நுவர வாவியிலிருந்து ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவர வாவியின் அளவீட்டின் போது பாரம்பரிய எல்லைக் கற்களுக்குப் பதிலாக நீர்ப்பாசனத் துறைக்கு தனித்துவமான ஒரு சிறப்பு அடையாளத்தைப் பயன்படுத்தி காப்புப் பகுதிக்கு பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.
நுவர வாவிவைச் சுற்றி சட்டவிரோதமாக வசிக்கும் மக்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.
அரச நிர்மாணங்களை அகற்ற வலியுறுத்து
கலந்துரையாடலில் பேசிய வடமத்திய மாகாண வர்த்தக சபையின் பணிப்பாளர் நாயகம் “சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, முன்னர் நுவர வாவிப் பகுதியில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லம், ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம், அபிமன்சாலை போன்ற அரச நிர்மாணங்களை முதலில் அகற்றி முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் உள்ள நுவர வாவி, இறக்காமன் குளம், தம்பர வாவி, தெமோதர வாவி, எல்ல கந்த வாவி, திஸ்ஸ வாவி, ரிதியகம குளம், தேவஹுவ வாவி, வெமடில்லா வாவி, சியம்பலங்காமுவ வாவி, ரியம்பலங்காமுவ வாவி, றிதியகம குளம், தம்பர வாவி, தெமோதர குளம் என்பன சட்டவிரோத நிர்மாணங்களைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட நீர்த்தேக்கங்களாகும்.
யோதா குளம், அகத்திமுருப்பு வாவி, வியாடி குளம், பாவட்ட குளம், மின்னேரியா குளம், கிரித்தலே குளம், கிண்ணிமிட்டிய நீர்த்தேக்கம், தம்போவ ஏரி மற்றும் கந்தளே ஏரி ஆகியவையும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
