செங்கடலில் இஸ்ரேலுக்கு ‘செக்’ வைத்த ஹவுதி
செங்கடலில் இஸ்ரேலின் கடல் போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளதுடன், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் ஆதரவுபெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. செங்கடலின் முக்கிய நுழைவாயிலான பாப் எல்-மந்தாப் நீரிணையை இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
“செங்கடலில் இஸ்ரேலிய கடல்வழிப் போக்குவரத்திற்கு முழுமையான மற்றும் மொத்தத் தடையை நாங்கள் அறிவிக்கிறோம்” என ஹவுதிகளின் ஆயுதப் படைகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டது தடை
மேலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட தருணத்திலிருந்து, செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள் அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல்களின் இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய ராணுவ இலக்குகளாகக் கருதப்படும் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹவுதி அமைப்பின் இந்த தடையால் இஸ்ரேலின் சரக்கு கப்பல்கள் தெற்கு ஆபிரிக்காவின் முனையைச் சுற்றி நீண்ட தூரம் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில் வெளியான அறிவிப்பு
ஏற்கனவே ஈரான் அரசால் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேசமயம், இந்த தாக்குதலை தங்கள் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக இஸ்ரேலும் அறிவித்துள்ளது. காஸா, லெபனான் மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, தாங்கள் இந்தத் தடையையும், ஏவுகணைத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்