தமிழ்தேசியம் தடம்மாறலாம் - ஆனால், தடம்புரளக் கூடாது என்கிறார் வியாழேந்திரன்
தமிழ்தேசியம் என்பது தடம்மாறலாம் ஆனால், ஒருபோதும் தடம்புரளக் கூடாது என்கிறார் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendran).
அரச தலைவரின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக ஆயித்தியமலை மணிபுரம் தணிகாச்சலம் வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''எமது தமிழ் தலைமைகளால் பிரச்சினையை மாத்திரம் தான் சொல்ல முடியும். 72 வருடங்கள் அல்ல, 700 வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கான பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியாது.
ஆண்டாண்டு காலமாய் அதே பொய், அதே பித்தலாட்டம். எனக்கு வாக்களித்த அந்த 34 ஆயிரம் மக்களால் தான் இந்த மாகாணத்தின், இந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் இன்று நன்மை பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் அந்த 34 ஆயிரம் பேரையும் என்னால் மறக்க முடியாது.
தமிழ்தேசியம் என்பது தடம் மாறலாம், தமிழ்தேசியம் தடம்புரளக் கூடாது. இதுதான் யதார்த்தம்.
1983 இற்கு முதல் அகிம்சை வழி சாத்வீகப் போராட்டம் அது தான் தமிழ் தேசியம். 1983 முதல் ஆயுதம் தூக்காத போராட்டம் அதுதான் தமிழ் தேசியத்தின் பாதை.
1983 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு விடுதலை புலிகள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அகிம்சையில் இருந்து ஆரம்பித்த ஆயுதப்போராட்டம், 2009 மே மாதத்திற்கு பிறகு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாறியது.
வரலாற்றில் தமிழ் தேசியம் தடம்மாறி வந்திருக்கின்றது, ஆனால் தடம்புரளக் கூடாது காலம் சூழ்நிலைக்கேற்றவாறு நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.