திருகோணமலை எண்ணெய் குதங்கள் கைமாற்றப்பட்டது எப்படி?
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை சாட்டாக வைத்து திருகோணமலை எண்ணெய் குதங்கள் விடயத்தில் அரசாங்கம் தப்பித்துக்கொள்ளவதைப் போன்று 13 ஆம் திருத்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவீர்களா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella), எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் நாடாளுமன்றத்தில் வைத்து இன்று இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) வலுசக்தி அமைச்சின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பினார்.
முன்னைய அரசாங்கம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு நிரந்தரமாக கொடுத்துவிட்டதாக நேற்று குற்றஞ்சாட்டியிருந்த விடயத்தை சுட்டிக்காட்டிய கிரியெல்ல, இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 13ஆம் திருத்த சட்டத்தையும் அதே போன்று நடைமுறைப்படுத்துவீர்களா? என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கம்மன்பில, கிரியெல்லவின் வயது காரணமாக அவருக்கு சரியாக தான் கூறியது விளங்கவில்லை எனவும், 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இது கைமாற்றப்பட்டதாகவும் அதனை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட நபரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட வேளையில் சபையில் இருந்ததை சுட்டிக்காட்டினார்.
இந்த கேள்விகளுக்கு இல்லை என அவர் பதில் கூறியிருந்தால் அரசாங்கம் நெருக்கடிக்குள் விழுந்திருக்கும் எனவும், ஆம் என பதிலளித்திருந்தால் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்திருக்கும் எனவும் சமிந்த விஜயசிறி குறிப்பிட்டார்.
ஆகவே ரணில் விக்ரமசிங்க தெளிவான பதிலை கூறாத காரணத்தினால் இன்று முரண்பாடுகள் தொடர்வதாகவும் சமிந்த விஜயசிறி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.