தடுப்புக் காவலில் மரணிப்போர் : மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவு
காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுகின்ற போது, மரணிப்போர் தொடர்பில், நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறை பதில் அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அது தொடர்பான அறிக்கையை 2025 ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
2.5 மில்லியன் ரூபா இழப்பீடு
இந்நிலையில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் காவலில் இருந்த போது மரணமான இலங்கை தொழிற்பயிற்சி ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் சமந்தா பிரீத்தி குமாரவின் குடும்பத்துக்கு ஒன்பது காவல்துறை அதிகாரிகள் 2.5 மில்லியன் ரூபாவை இழப்பீடு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
ஹிக்கடுவ தல்வட்டாவைச் சேர்ந்த இறந்தவரின் மனைவி டி.பி.தில்ருக்ஷி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையகம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னதாக அண்மைய மாதங்களில் தொடர்ச்சியான காவல் நிலைய மரணங்களைத் தொடர்ந்து காவல் நிலைய மரணங்களைத் தடுப்பது குறித்து மே மாதம் காவல்துறைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 119 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் காவல்துறையினருடனான மோதல்களால் ஏற்பட்ட 30 இறப்புகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
