வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை மடக்கிப்பிடித்த மக்கள் - தப்பிக்கவிட்ட காவல்துறை!
சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏழாலையில் இரவு வேளையில் வீட்டிலிருந்த முதியவர்களை தாக்கியவர்களை பிடித்து அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்த போதிலும் சந்தேக நபர்களை காவல்துறை விடுவித்தமை தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உத்தியோகத்தர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஏழாலையில் கடந்த 04 ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். தாக்குதல் மேற்கொண்டவர்களை சிலர் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனினும், காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே அது தொடர்பான விசாரணை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்தியவர்களை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதாகவும் சுன்னாகம் காவல்துறை தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் காவல்துறையினரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.