பிரான்ஸில் தீவிரமடையும் மாணவர் போராட்டங்கள்: நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு பூட்டு
பிரான்ஸில் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் வன்முறையாக மாறியுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பிரான்ஸிலுள்ள 3,700 மேல்நிலைப் பாடசாலைகளில் குறைந்தபட்சம் 400 பாடசாலைகள் வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய கல்வி அமைச்சு, 560 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் போராட்டங்கள் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பரிஸ் பிராந்தியத்தில் ஆரம்பமான இப்போராட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பரவி, காவல்துறையினருடன் தீவிர மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன.
முகமூடிகளை அணிந்தவாறு வீதித் தடை
வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் முகமூடிகளை அணிந்தவாறு வீதித் தடைகளை ஏற்படுத்தியும், தீ வைத்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் பரிஸிலுள்ள இரு பாடசாலைகளின் நுழைவாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால், தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தீக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இப்போராட்டங்களின் போது இதுவரை சுமார் 2,000 பேர் வரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பான்மையானோர் சிறுவர்கள் எனக் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், காவல்துறையினருடனான மோதல்களில் 170 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 40 அதிபர்கள் உட்பட 65 பாடசாலை ஊழியர்களும் காயமடைந்துள்ளதுடன், 100 க்கும் மேற்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
பெரும் அரசியல் அழுத்தம்
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்துவது கவலையளிப்பதாக மனித உரிமைகள் அமைப்பான 'அம்னெஸ்டி இன்டர்நெஷனல்' சுட்டிக்காட்டியுள்ளது.

பிரான்ஸில் நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டக் குறைப்புகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இந்த மாணவர் போராட்டமும் இணைந்துள்ளமையால், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அரசாங்கத்திற்குப் பெரும் அரசியல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், மாணவர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |