ஆறு ஆண்டுகளைக் கடந்து வெற்றிநடை போடுகிறது ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி
ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி, இன்று (19) தனது ஏழாவது அகவையில் கால்பதித்துள்ளது.
பல்வேறு சவால்களைக் கடந்து தமிழ் தேசியம் சார்ந்த இலக்குக்குரிய தடத்தில் பயணிக்கும் ஐ.பி.சி தமிழ் குடும்பம் தற்போது உலகளாவிய கொரோனா பெருந்தொற்று சவால்களுடன் தனது ஊடகப்பணியைத் தொடர்கிறது.
ஐபிசி தமிழ் குடும்பத்தின் மூத்த அங்கமாக கடந்த 25 வருடங்களாக லண்டனை தலைமையகமாக கொண்டு ஐபிசி தமிழ் வானொலி சேவை இயங்கிவருகின்றது.
தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற ஐ.பி.சி தமிழ், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியாகவும் புதிய பரிணாமத்தைப் பெற்றது.
மக்கள் ஆதரவின் பிரதிபலிப்பாக தற்போது ஐ.பி.சி தமிழ் பக்தி, ஐ.பி.சி தமிழ் மழலை, ஐ.பி.சி தமிழ் பகடி ஐ.பி.சி தமிழ் சிலுவை ஆகிய அலைவரிசைகள் ஐ.பி.சி தமிழ் குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தவிர உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கு அன்றாட சம்பவங்களை செய்திகளாக கொண்டு சேர்ப்பதில் ஐ.பி.சி தமிழ் முன்னின்று செயற்படுகின்றது.
அனைத்துவித ரசனைகளையும் கொண்ட நிகழ்ச்சிகளையும் நேர்காணல்களையும் படைக்கும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி, அதன் தாயகக் கலையகத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவி, தொலைக்காட்சி சார்ந்த புதிய படைப்புக்களையும் உருவாக்கி வருகின்றது.
தாயகக் கலையகம் ஊடாக செய்தி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு, ஒளிபரப்பு என அடுத்த கட்டடத்திற்கு நகரந்துள்ள ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல் அல்லாமல் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அடையாளமாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
வணக்கம் தாயகம் நிகழ்ச்சியானது, பல்வேறு கருத்துள்ள விடயங்களை கொண்டுவரும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி, இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகை செய்திகளை மாத்திரம் அல்லாமல் அன்றாட முக்கிய நிகழ்வுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக, சொந்த இடங்களின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வகையில் வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியை ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகின்றது.
என் இனமே என் சனமே, உறவுப்பாலம் போன்ற நிகழ்ச்சிகள் ஊடாக பாதிக்கப்பட்ட எம்மவர்களின் துயரங்களை வெளிக்கொண்டுவந்து அவர்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுக்கும் மகத்தான பணியையும் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி மேற்கொண்டுவருகின்றது.
தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் தீர்ப்பாயம், சக்கரவியூகம் போன்ற நிகழ்ச்சிகளும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
ஐ.பி.சி தமிழ் குடும்பத்தின் அங்கமான ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்காக கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களையும் இடர் காலங்களிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளையும் இரவுபகல் பாராது முன்னெடுத்திருந்தது.
ஐ.பி.சி தமிழானது வானொலியில் ஆரம்பித்து, தொலைக்காட்சியாக புதிய பரிணாமத்தை எட்டி இன்றுடன் ஆறு ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளதை, குறிக்கும் வகையில் தாயகக் கலையகத்திலும் லண்டன் கலையகத்திலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.