ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி!
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் எல்லையை மீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் சியூட்டாவிற்கும் அண்டை நாடான மொராக்கோவிற்கும் இடையிலான கடல் எல்லையில் 500 மீற்றர் நீளமுள்ள தடுப்பணையை அமைத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 67 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் சிலர் நீரில் மூழ்கியும், அலைத்தடுப்புச் சுவரைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசாங்கம் சனிக்கிழமை தெரிவித்தது.
நெருக்கடியைத் தூண்டியது
வியாழனுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையில் அப்பகுதிக்குள் 50,000 முதல் 60,000 புலம்பெயர்ந்தோர் திடீரென வந்தடைந்தமை ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியதுடன் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் குடியேற்றம் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்திய நிலையில் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் விரைவில் திரும்பிச் சென்றுவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஊக்குவிக்கப்படும் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் நாடு கடத்தலை ஆதரிக்கும் கொள்கைகளுக்கு மாறாக, ஸ்பெயினின் குடியேற்றக் கொள்கையானது, தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அங்கீகாரம் இல்லாத தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
சியூட்டாவில் நடந்த நிகழ்வுகள் குறித்த சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் எதிர்வினையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஸ்பானிய உள்துறை அமைச்சர்
சியூட்டா நெருக்கடி இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் மத்திய தரைக்கடல் அண்டை நாடுகளான இத்தாலி மற்றும் கிரீஸை விட ஸ்பெயினில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

சியூட்டாவிலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பானிய உள்துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ கிராண்டே மார்லாஸ்கா, 24 மணி நேரத்திற்குள் ஸ்பெயின் பெருமளவில் ஒழுங்கை மீட்டெடுத்துவிட்டதாகக் கூறினார்.
ஆனால், நெருக்கடி இன்னும் முறையாக முடிவடையவில்லை என்றும், இரவு நேரக் கடல் கடப்புகள் ஏறக்குறைய பூச்சியமாகக் குறைந்திருந்தாலும், தேவைப்படும் வரை பலப்படுத்தப்பட்ட காவல்துறை மற்றும் இராணுவப் பாதுகாப்பு தொடரும் என்றும் அவர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |