சம்பியன்ஸ் கிண்ண தொடர் : இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
சம்பியன்ஸ் கிண்ண தொடரில்(ICC Champions Trophy) இன்று(23) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு (pakistan)எதிரான போட்டியில் கோலியின் சதத்தின் மூலம் இந்தியா(india) 06 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
டுபாயில்(dubai) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் விளையாடியது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் களமிறங்கியபோதிலும் இந்த இணை பாகிஸ்தானுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. பாபர் அசாம் 23 ஓட்டங்களிலும், இமாம் உல் ஹக் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, அணித்தலைவர் முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர்.
இறுதிக்கட்டத்தில் சிறப்பான ஆட்டம்
இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்கள் சேர்த்தது. சௌத் ஷகீல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 76 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அணித்தலைவர் முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின் களமிறங்கியவர்களில் குஷ்தில் ஷாவைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்கவில்லை. இறுதிக்கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஷ்தில் ஷா 39 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆரம்பமே சொதப்பிய ரோகித் சர்மா
242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா 15 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து ஷாகின் ஷா அஃப்ரிடி பந்துவீச்சில் போல்டானார்.
அதன் பின், ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. இருப்பினும், ஷுப்மன் கில் 52 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, விராட் கோலியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.
நிலைத்து நின்ற கோலி
இந்த இணை அபாரமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 111 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி 42.3 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்