மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் : தென்னிலங்கையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(vajira abeywardena) எச்சரித்துள்ளார்.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், பாரம்பரிய குறுகிய பிரிவினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை சிலர் முன்வைப்பது வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் இன்று (29) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிவில் போராட்டம்
பழைய அரசியல் கட்சிகள் பாரம்பரிய முறைப்படி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளதாகத் தெரிவித்த அவர் முன்னைய நிர்வாகத்திற்கு எதிராக சிவில் போராட்டம் நடத்தப்பட்டதாக நினைவூட்டினார்.
அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு வாக்குகளைப் பயன்படுத்துவதா என்ற கேள்வி எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கை மக்கள் முன் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |