கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பௌத்த கட்டுமானம் : சுமந்திரனின் அதிரடி அறிவிப்பு
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக பெளத்த விகாரை கட்டுமானம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அது தொடர்பில் மீண்டும் நீதிமன்றில் முறையிட தயாராக இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இன்று (04) திருகோணமலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றை அண்மித்த தொல்பொருள் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட காணியில் தொல்பொருளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் புதிதான ஒரு கட்டுமானம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.
நீதிமன்ற தீர்ப்பு
கடந்த 2019, 2020 காலப்பகுதியில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று அமைந்துள்ள பகுதியில் உள்ள புராதன இந்துக் கோவில் கட்டுமானப்பணி மற்றும் விகாரை கட்டுமானப்பணி தொடர்பில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அதுதொடர்பான வழக்கின் தீர்ப்பிற்கு அமைவாக பெளத்த விகாரை இருந்ததாக குறிப்பிடப்படும் பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அது தவிர்ந்த பிறிதொரு காணி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு பிள்ளையார் கோவில் அமைக்க முடியும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த பகுதியில் நீதிமன்ற தீர்ப்பின்போது எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு மாறான செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுவதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
புதிதான கட்டுமானப்பணிகள்
அதுதொடர்பில் நாம் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது புராதன பெளத்த விகாரை அமையப்பெற்றதாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் பகுதியில் புதிதான கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தென்படுகின்றன.

அது தொடர்பில் காவல்துறையினரிடம் முறையிட்டிருப்பதுடன் குறித்த வழக்கின் 2ம் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிமன்ற விடுமுறைக்காலம் முடிவுற்றதும் இது தொடர்பாக நீதிமன்றிலும் முறையிடத்தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |