சட்டவிரோத மீன்பிடி - அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு
ஒருபோதும் அனுமதிக்க முடியாது
சட்டவிரோத மீன்பிடியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இச்செயற்பாடு காரணமாக மீன் இனம் முற்றாக அழிந்து விடும். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய அதிகாரிகளிடம் வேண்டிக்கொண்டார்.
திருகோணமலை மாவட்ட மீனவ சங்கங்களுடனான கலந்துரையாடல் இன்று (11) உப்புவெளி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
மீனவர்களுக்கான மண்ணெண்ணை
மீனவர்களுக்கான மண்ணெண்ணையை சீராக வழங்க தற்போது இறக்குமதி செய்யப்படும் மண்ணெண்ணை போதுமானதாக காணப்படவில்லை. எனவே மண்ணெண்ணையை தனியார் இறக்குமதி செய்யவதற்கான அனுமதியை கோரியுள்ளோம்.அவ்வனுமதி கிடைக்கப்பெறுமாயின் மீனவர்களுக்கான மண்ணெண்ணை பிரச்சினையை தீர்க்க முடியும்.
நான் வருகை தந்தது மீனவர்களது பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்ப்பதற்கே ஆகும். மீனவர்களது நியாயமான கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.
மீனவ சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க மீனவ சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அமைச்சு,திணைக்களம் மற்றும் மீனவ சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இப்பிரச்சினையை தீர்க்க முடியும். வெறுமனே ஒரு தரப்பிற்கு மாத்திரம் இதனை தடுக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தைச்சேர்ந்த பல மீனவசங்கங்கள் இதன்போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தனர். குறித்த கோரிக்கைகளை தமக்கு எழுத்து மூலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது அமைச்சர் வேண்டிக்கொண்டார்.
அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர்
அதிகமான பிரச்சினைகளை அமைச்சர் ஆழமாக ஆராய்ந்து சில பிரச்சினைகளை உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்க்க முற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மீன்பிடி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.