நிறுத்தாவிட்டால் வடக்கை முடக்குவோம்..! விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
வடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வடமாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளன தலைவர் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களை நிறுத்துமாறு கோரும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்தி இருந்தார். அதன் போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " வடக்கு மாகாணத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களை நிறுத்துமாறு கோரும் முகமாக இன்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம், முல்லைத்தீவில் இடம் பெற்ற மீனவர்களின் போராட்டமானது ஒரு நியாயமான போராட்டம் அந்தப் போராட்டத்திற்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.
குறித்த போராட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து வந்த குழு ஒன்று அவர்களது கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து அமைச்சு மட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி தீர்வு வழங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
எதிர்வரும் 12ஆம் திகதி மீனவர்களுக்கு சார்பாக தீர்வு வராவிட்டால் வடக்கு மாகாணத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாங்க தீர்மானித்துள்ளோம்.
மீனவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம்
எனவே, எமது எதிர்பார்ப்பை கடற் தொழில் அமைச்சர் மீறுவாராக இருந்தால் வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழில்களை நிறுத்துவதற்குரியவாறாக அவருடைய தீர்மான அறிவிப்பு இடம்பெற வேண்டும்.
அவ்வாறு இடம் பெறாத பட்சத்தில் வடக்கு மாகாணம் முழுவதிலும் மீனவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக இருக்கின்ற கடற்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் இன்னும் கட்டுப்படுத்தவில்லை.
வடக்கு மாகாண கடற்படை தளபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
சட்டம் பலமாக உள்ளது ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படாமையால் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முல்லைதீவு மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை மேற்கொண்ட போது சட்டவிரோதமான தொழிலை மேற்கொள்வோர் இந்த போராட்டத்துக்கு எதிராக சட்ட விரோதமாக தொழில் செய்பவர்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.
அவர்களது நியாயமற்ற கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாகவே அரசாங்கம் இருக்கின்றது முல்லைதீவில் சட்டவிரோத தொழில் செய்பவர்கள் நியாயமான தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக போராடியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இனிவரும் காலங்களில் சட்டவிரோத விரோத தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதோடு சட்டம் சரியாக நடைமுறைப்பட்டிருந்தால் இந்த சட்ட விரோத தொழில்கள் இடம் பெறாது.
வடக்கு மாகாண கடற்படை தளபதிக்கு மீனவ சமூகங்கள் சார்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கின்றோம் இந்த சட்ட விரோத தொழில்களை நிறுத்த வேண்டிய பொறுப்பு கடற்படையினருக்கு உள்ளது எனவே சட்டத்தினை நடைமுறை படுத்த உரிய நடவடிக்கையை நீங்கள் முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கை விடுகின்றோம்" எனக் குறிப்பிட்டார்.