யாழ் - மானிப்பாயில் சட்டவிரோதமாக மஞ்சள் கடத்திய இருவர் கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்திச்சென்ற இருவரை இன்று(12) மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்துக்கிடமாக பயணித்த வாகனம்

இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பயணித்த வாகனமொன்றை காவல்துறையினர் வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இரண்டு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் நாளை(13) முற்படுத்த மானிப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

