சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப பேச்சில் முட்டுக்கட்டை - ரணில் உடனடி தலையீடு
இலங்கையில் தங்கியுள்ள சர்வதேச நாணய நிதியக்குழு இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய குழு இன்றைய முதல்நாள் சந்திப்பின்போது, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தது.
எனினும் இந்தப் பேச்சுக்களில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அடுத்து நாணய நிதியக்குழு, ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் இரண்டாம் கட்டமாக, மத்திய வங்கியுடனும் நாணய நிதியகுழு பேச்சுக்களை நடத்தவுள்ளது.
சர்வதேச நாணய நிதியக்குழு சந்திப்பு
இந்தச் சந்திப்புக்களின் பின்னர் இலங்கையின் நிதி மற்றும் சட்ட ஆலோசனைக்காக வெளிநாடுகளில் இருந்து அமர்த்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் இந்தக்குழு பேச்சுக்களை நடத்தவுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான கடன் சலுகை தொடர்பான நிலைப்பாட்டில் சீனா மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அதனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜப்பானும் இலங்கைக்கான அபிவிருத்திக் கடன்களை இடைநிறுத்தியுள்ள நிலையில், இன்று ஜப்பான் தூதுவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.