சொகுசு வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Traffic) வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) இந்த உததரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகன உதிரிப்பாகங்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு தரவு அமைப்பின் நகலை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளின் பின்னர், மோசடியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் ஏற்பட்ட நட்டத்தை விட இந்த மோசடி மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |