அத்தியாவசிய உணவுபொருட்களின் இறக்குமதியில் மோசடி..! இறக்குமதியாளர்கள் கவலை
பச்சைப்பயறு, உளுந்து, குரக்கன், சோளம் மற்றும் கௌபீ போன்ற உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்கள் தெரித்துள்ளனர்.
நேற்றைய தினம் (04) வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவை சந்தித்த போதே அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்கள் இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த உணவுப் பயிர்களின் உள்ளூர் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னதாக இலங்கை இந்த உணவுப்பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.
இறக்குமதித் தடை
பின்னர், ஒரு கிலோவுக்கு 300 ருபாய் வரி விதிக்கப்பட்டு, விவசாய அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, நாட்டிற்கு அத்தகைய இறக்குமதியை அனுமதித்து தடை நீக்கப்பட்டது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலினை கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதியன்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார், இருந்தபோதும் இறக்குமதி அனுமதிப் பத்திரங்களுக்கு அமைச்சிடம் அனுமதி பெறுவதில் மோசடி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
"ஒரு திறந்த சந்தைப் பொருளாதாரத்தில், உரிம நடைமுறைகளின் கீழ் இறக்குமதி அனுமதிக்கப்படும் போது மோசடி நிகழ்வதாகவும், இந்த பொருட்கள் சாதாரண மக்களால் உணவுக்காக கொள்வனவு செய்யப்படுகிறது.
அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், இந்தப் பொருட்கள் கிலோ 300 ரூபாவுக்கும் குறைவாக விற்பனை செய்ய முடியும்” எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
உள்ளூர் பயிர்கள் நாசம்
தவிரவும், வரி அடிப்படையில் அரசாங்க வருமானத்தை மறுத்து இந்த பொருட்களும் நாட்டிற்கு கடத்தப்படுகின்றன என்றும் அதற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பச்சைப்பயறு மற்றும் உளுந்து போன்ற பொருட்களுக்கான தேவை பொதுவாக ஏப்ரல் புத்தாண்டு காலப்பகுதியில் அதிகரிக்கிறது, ஏனெனில் மக்கள் இனிப்பு மற்றும் பிற உணவுப் பொருட்களைத் தயாரிக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
கடந்த ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக உள்ளூர் பயிர்களும் நாசமாகியுள்ளதால் பொருட்களுக்கான கிராக்கி அதிகரிக்கவுள்ள நிலையில் அவற்றை பெற்றுக்கொள்வதில் ஏற்படவுள்ள சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |