கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
கட்சிகளுக்கு அப்பால் தமிழ்மக்களின் இன விடுதலைக்கு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், மிக நீண்ட போராட்டத்திற்கு பிற்பாடு புதிய ஒரு அரசாங்கத்தின் நிழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "புதிய அரசாங்கம் ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்து வந்திருந்தாலும் கூட இன்று அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏதாவது நடைபெறுகின்றதா? தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டி இருக்கின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கமானது தமிழ் மக்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யுமென்றோ, வாக்குறுதிகள் அளித்தபடி எமது பிரச்சினைகளை தீர்ப்பார்களென்றோ நாங்கள் முழுமையாக எதிர்பார்க்க முடியாது.
பயங்கரவாத தடைச் சட்டம்
அவர்கள் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைகின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் தொடர்பாக அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டமாக இருக்கலாம், மாகாண சபை தேர்தலாக இருக்கலாம், காணிகள் விடுவிப்பாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வாக இருக்கலாம் எந்த பிரச்சினைகளுக்கும் அவர்கள் தீர்வினை வழங்கவில்லை. அடுத்த வருடம் தேர்தல் வரும் என நாங்கள் இப்போதும் ஒரு கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோம்.
மாகாண சபை அமைச்சர் சொல்வார் delimitation commission (எல்லை நிர்ணய) ஒன்றை நியமித்து அதற்குப் பின்னர் தான் நாங்கள் இந்த மாகாண சபை தேர்தலை நடத்தப் போகின்றோம் என்று.
பிமல் ரத்னாயக்க என்ற அமைச்சர் கூறுவார் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடக்கும் என்று. ஜனாதிபதி அமைச்சர்களை பேசவிட்டு அவர் மௌனமாக இருப்பார்.
முன்னைய அரசாங்கங்கள் செய்த அனைத்தும் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முல்லைத்தீவு, வவுனியாவில் சிங்கள குடியேற்றங்களாக இருக்கலாம், அல்லது புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்குவதாக இருக்கலாம், அது அல்லது தொடர்பான இராணுவத்தின் நடவடிக்கைகளாக இருக்கலாம் எதுவும் நிறுத்தப்படவில்லை.
ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அனைத்து விடயங்களையும் இந்த அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.
உலகத்திலேயே மிகவும் பெருமளவிலான பலம்பொருந்திய கடற்படை, விமானப்படை, காலாட்படை என பல படையணிகளை கொண்டு தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை நடாத்தி இப்போது நாங்கள் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு இருக்கின்ற ஆசனங்கள் ஊடாக அரசாங்கத்துடன் பேச முடியுமா என்ற நிலைமைக்குள் வந்திருக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
