கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்ரீலங்காவுக்கு வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஹான் பெப்ரவரியில் ஸ்ரீலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விஜயம் பெப்ரவரி மாத இறுதியில் இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரம் தி இந்துவிடம் திங்களன்று தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக அவர் இருப்பார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு இம்ரான் ஹானின் திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.
யுத்த காலத்தில் ஸ்ரீலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.
கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.