GOVPAY செயலி அறிமுகத்தினால் ஏற்பட்டுள்ள பாதக விளைவு
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் பெருமளவான வருமானத்தை இழந்து வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அஞ்சல் துறையில் காணப்படும் நவீன வசதிகள் மூலமாகவும் இந்த சேவைகளைப் பெறமுடியும் என அந்த முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த புதிய செயலி ஊடாக அஞ்சல் திணைக்களம் கணிசமான அளவு வருமானத்தை இழக்கின்ற போதிலும், அனைத்து வருமானமும் திறை சேரியைச் சென்றடைவதால் அரசாங்கம் இந்த சேவையினை ஆதரிக்கும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
அனுமதிப் பத்திர விடுவிப்பு
போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி கடந்த 11 ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக 12 இடங்களில் நடைமுறைபடுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் GOVPAY செயலி ஊடாக உடனடியாக அபராதத்தைச் செலுத்துவதற்கு வழிசமைக்கப்படுவதுடன், அபராதம் செலுத்தப்பட்ட அடுத்த நொடியே வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் காவல்துறையினரால் விடுவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
