மக்களுக்கு தொடரும் அழுத்தம் : அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, உலர் மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உலர் மிளகாய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், அதன் விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த விடயத்தை அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
எல் நினோ காலநிலைத் தாக்கம்
தரநிலைகளுக்கு உட்படாததாகக் கூறப்படும் இறக்குமதி செய்யப்பட்ட உலர் மிளகாய் அடங்கிய 100 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் உணவு ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கொள்கலன்களில் உள்ள உலர் மிளகாயை உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்காமல், மீண்டும் ஏற்றுமதி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலைமையைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கங்கள் இலங்கைக்கு உலர் மிளகாய் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக எஸ். விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, உள்நாட்டுச் சந்தையில் உலர் மிளகாய் ஒரு கிலோகிராமின் விலை தற்போது 1,300 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலவும் எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |