இலங்கையில் அதிகரித்த சிறுவர் துஷ்பிரயோகம் : கடும் நடவடிக்கைக்கு உத்தரவு
இலங்கையில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான 22 சிறுமிகள் தாய்மை அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடுமையான நடவடிக்கை
இலங்கையில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையினரை இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கோரியுள்ளார்.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு இரையாகாமல் தமது குழந்தைகளைப் பாதுகாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பெரும்பாலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களது சொந்த வீட்டில் உள்ள ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதிகரித்து வரும் இந்தப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்கள் அதிபருடன் நடத்தப்படவுள்ள நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
காவல்துறையினரின் அலட்சியமும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ள கீதா குமாரசிங்க, போதைப் பொருட்களின் அதிகரித்த பாவனையும் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுவதற்கு ஒரு காரணமாக அமைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் தாம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்புக்கூறும் அதே வேளையில், இலங்கையின் ஒட்டுமொத்த சமூகமும் அத்தகைய பொறுப்பை ஏற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.