இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற யுவதி
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி வயது-19 என்ற யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் சென்று இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கடந்த 2018 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விசா முடிந்த பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வலசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு திரும்பி வருவதற்காக இன்று அதிகாலை தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்ட விரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மெரைன் பொலிசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடி அழைத்துச் சென்றுள்ளனர்.
கஸ்தூரியிடம் மெரைன் பொலிசார் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டதன் பின் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் சென்று வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்கின்றனர்.
எனவே பிடிபட்ட இலங்கை பெண் கஸ்தூரி வெளிநாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில் அழைத்துச் சென்ற முகவரை தேடி வருகின்றனர்.
கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.