இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட கனேடிய தூதரக அதிகாரிகள்: அம்பலமாகும் காரணங்கள்
இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேர் வெளியேற்றபட்டதற்கான காரணங்கள் தொடர்ந்தும் வெளியாகிவருகின்றன.
இந்தியா கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரையும் வெளியேற்றுமாறு கனடாவை அறிவுறுத்தியதன் பின் கனடா இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகளை குடும்பத்துடன் திரும்ப அழைத்துக்கொண்டது.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர், தொடர்ச்சியாக கனேடிய தூதரக அதிகாரிகள் இந்திய உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பில் கவலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே, அவர்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் வியன்னா ஒப்பந்தத்திற்குட்பட்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
கனடாவிற்கு எதிரான ஆதாரங்கள்
இதன்போது, இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு துணை தூதரகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள கனேடிய தூதர்கள், தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, காலிஸ்தான் ஆதரவாளர்களாக அறியப்பட்ட குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு விசா வழங்குகிறார்கள் என இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரத்திலுள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, கனேடிய தூதரக அதிகாரிகள் இதை வேண்டுமென்றே செய்துள்ளார்கள் எனவும் அதற்குக் காரணம், குறிப்பிட்ட நபர்களை இந்தியாவிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல விசா வழங்குவதுதான் என்றும் கூறும் அதிகாரிகள், வழக்குகளில் சிக்கியவர்களுக்கு கூட இந்த தூதரக அதிகாரிகளால் விசா வழங்கப்பட்டு, அவர்கள் கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
காரணங்கள்
அத்தோடு, சில சந்தர்ப்பங்களில், சிலரை கனடாவிலிருந்து இந்தியாவிற்கு நாடுகடத்துவதற்கும், கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை விசாரிப்பதற்கும் ஒத்துழைக்க கனடா மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கனடா ஆதரவு அளித்ததற்கான ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக, இவ்வளவு காரணங்கள் இருப்பதாலேயே இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க, இந்திய அரசு முடிவு செய்ததாக தற்போது அரசு அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.