தமிழர் தாயகப்பகுதியில் ஆழமாக காலூன்றுகிறது இந்தியா
திருகோணமலை எண்ணெய் குதங்களில், இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தால் தற்போது பராமரிக்கப்படும் 14 எண்ணெய்க் குதங்களையும், மேலும் 50 வருடங்களுக்கு அவர்களுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மொத்தமாகவுள்ள 99 குதங்களில் 85 தாங்கிகள் தற்போது ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மொத்தமாகவுள்ள 99 தாங்கிகளில் 85 தாங்கிகள் காணப்படுகின்றன. 14 தாங்கிகள் மாத்திரமே இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன. அத்துடன், ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் புதிதாக நிறுவப்பட்ட ட்ரின்கோ பெற்றோலியம் டர்மினல்ஸ் லிமிடெட் மற்றும் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, மேலும் 61 தாங்கிகளை நிர்வகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதன் 61 தாங்கிகளின் 51% ஆனவை ட்ரின்கோ பெற்றோலியம் டர்மினல்ஸினாலும் அதன் 49% இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தினாலும் நிர்வகிக்கப்படும். கடந்த காலத்தில் எமது அரசாங்கத்தினால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை, மீண்டும் எம்மால் பெறமுடிந்துள்ளது.
தற்போது இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வெற்றிகரமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது. நாம் தற்போது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாட்டுக்கு அமைய, திருகோணமலை 99 தாங்கிகளில் 24 இனை இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை பெற்றோலியத்திடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1987 இல் கூட்டாக இணைந்து எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கையைத் தாண்டி, 24 தாங்கிகள் மீட்கப்பட்டுள்ளது. ட்ரின்கோ பெற்றோலியம் டர்மினல்ஸ் நிறுவனமானது, பெற்றோலிய நிறுவனத்துடன் இணைந்த நிறுவனம் என்பதுடன், அதன் பெரும்பலான பங்குகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானது.
அதிலுள்ள 7 பணிப்பாளர்களில் 4 பேர் மற்றும் அதன் தலைவர் ஆகியோர் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நியமிக்கப்படுவர். அத்துடன் ட்ரின்கோ பெற்றோலியம் டர்மினல்ஸ் நிறுவனமானது, கணக்காய்வாளரால் கணக்காய்வு செய்யப்படக் கூடிய, நாடாளுமன்றத்தின் கோப் குழுவுக்கு பொறுப்புக் கூற வேண்டிய, அதற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்வி எழுப்பக் கூடிய வகையிலான ஒரு நிறுவனமுமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.