வெடித்துச் சிதறும் ஏவுகணைகள்...! பாகிஸ்தான் துணை பிரதமரின் அதிரடி அறிவிப்பு
புதிய இணைப்பு
தாக்குதல்களை நிறுத்துவதற்கு தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
பாகிஸ்தானில் (Pakistan) உள்ள 3 விமானப்படை தளங்களை குறி வைத்து இந்தியா இன்று தாக்குதல் நடத்தியதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இஸ்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்கள் பறக்க தடை
பெரும்பாலான ஏவுகணைகள்' இடைமறிக்கப்பட்டது 'எந்த இராணுவ தளங்களும்' சேதமடையவில்லை என்று பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3.10 முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் எரிபொருள் நிலையங்கள் இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரம் மூடப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை எச்சரிக்கும் இந்தியா
பற்றி எரியும் போர் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது.
கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்துள்ளது. (a)
