இந்தியாவின் சதுரங்க போட்டி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்
இந்தியாவின் சதுரங்க போட்டி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 22 வயதான அனுஜ் ஸ்ரீவாத்ரி, இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக விஸ்வநாதன் ஆனந்த் உருவான சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது.
100-வது கிராண்ட்மாஸ்டர்
பிலிப்பைன்ஸில் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஸ்ரீவாத்ரி இந்த மைல்கல்லை எட்டினார்.
GRANDMASTER No. 100 FOR BHARAT! India achieves a historic milestone as Anuj Shrivatri becomes the country's 100th Grandmaster by winning the 7th ASEAN+ Individual Chess Championships 2026 in Ozamiz City, Philippines, securing the direct GM title! Congratulations, Anuj! A proud moment for Indian chess. Onwards to 200 Grandmasters! @narendramodi @mansukhmandviya @FIDE_chess @PMOIndia @IndiaSports @Media_SAI @aicfchess
— Nitin Narang (@narangnitin) November 8, 2026
இந்த வெற்றியின் மூலம், மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து உருவான முதல் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், ஸ்ரீவாத்ரி அபாரமான மீள்வருகையை (comeback) வெளிப்படுத்தினார். ஒன்பது சுற்றுகளில் ஏழு புள்ளிகளைப் பெற்று அவர் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க, மென்பொருள் பொறியாளர் (software engineering) பணியைக் கைவிட்டு, முழுநேரமாகச் சதுரங்க விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவரது அர்ப்பணிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, 2020-ல் 'சர்வதேச மாஸ்டர்' (International Master) பட்டத்தைப் பெற்ற அவர், தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, சதுரங்க விளையாட்டின் மிக உயர்ந்த பட்டமான 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்தை அடைந்துள்ளார்.
1988-ல் தொடங்கிய கிராண்ட்மாஸ்டர் பயணம்
இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பயணம் 1988-ல் தொடங்கியது; அப்போது ஐந்து முறை உலக சம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆனார். அன்றிலிருந்து, சர்வதேச சதுரங்க அரங்கில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

தற்போதைய உலக சம்பியன் டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற முன்னணி வீரர்கள் இந்தியாவிலிருந்து உருவாகியுள்ளனர்.
குறிப்பாக, ஜூலை முதல் நவம்பர் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்தியா ஐந்து புதிய கிராண்ட்மாஸ்டர்களைப் பெற்றுள்ளது; இது இந்தியாவில் சதுரங்க திறமையாளர்களின் வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.
அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் நிதின் நாரங், ஸ்ரீவாத்ரியின் இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ளார். இது இந்திய சதுரங்க விளையாட்டுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்ட அவர், அடுத்து 200 கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கும் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஸ்ரீவாத்ரியின் இந்த வரலாற்றுச் சாதனை தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்திருப்பது, இந்திய சதுரங்க ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |