இலங்கையுடன் நிலத்தொடர்பிற்கு தயாராகும் இந்தியா :மௌனம் காக்கும் அநுர அரசு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்(narendra modi) இலங்கைக்கான(sri lanka) வருகையின் போது இந்தியா மீண்டும் இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது, ஆனால் இலங்கை அரசு இன்னும் உறுதியளிக்கவில்லை என்று கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டில், அப்போதைய இலங்கை அரசு இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையில் ஒரு நிலப் பாலத்தை முன்மொழிந்தது. அது ராமர் சேது அல்லது ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படும் பண்டைய நில இணைப்பை அடிப்படையாகக் கொண்டது.
திட்டத்தின் படி,வீதி மற்றும் தொடருந்து பால இணைப்புகளை உருவாக்க முன்மொழியப்பட்டது.
அநுரவின் இந்திய விஜயத்தில் இடம்பெறாத திட்டம்
பின்னர், இரு தரப்பினரும் மீண்டும் இந்தத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர், மேலும் அது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் கூட இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புது டில்லிக்கு விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இது சேர்க்கப்படவில்லை.
மோடியின் இலங்கை விஜயத்தில் முன்மொழிவு
பிரதமர் மோடியின் சமீபத்திய வருகையின் போது, இந்தியத் தரப்பு அதை முன்மொழிந்தது.எனினும் இலங்கை அரசு உடனடியாக அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், பிரதமர் மோடி, இந்தியப் பெருங்கடலில் 30 மைல்கள் (48 கி.மீ) வரை பரந்து விரிந்திருக்கும் இயற்கை சுண்ணாம்புப் பாறைகளின் பரந்த சங்கிலியான ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேதுவை தரிசனம் செய்தார். இந்தப் பழங்கால நிலப் பாலம் அதன் புவியியல், வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவத்திற்காகக் கொண்டாடப்படுகிறது. இந்த பழங்கால சுண்ணாம்புப் பாலம் பகவான் ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
