குடியரசு தினத்தில் இந்தியாவில் ரணகளம்
இந்தியாவின் சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகளின் பேரணியில் பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் இன்று உழவு இயந்திர பேரணி நடத்தினர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு எல்லையில் இருந்து பேரணியை ஆரம்பித்தனர்.
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரை பேரணி வந்தடைந்த போது, விவசாயிகள் ரிங் ரோடு வழியாக செல்ல முயன்றனர்.
ஆனால் பொலிஸார் அவர்களை தடுத்தனர். 45 நிமிடங்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு விவசாயிகள் நேரம் கொடுத்தனர்.
இதற்கிடையே விவசாயிகள் பொலிஸ் பாதுகாப்பு வாகனம் மீது ஏறினர்.
இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கும் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பொலிஸார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் அடிதடி ஏற்பட்டது. இதற்கிடையில், விவசாயிகள் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர்.
அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.