இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 'இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின்' மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை, இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை வந்தடைந்தார்.
அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மூவரும் வந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை
இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-31 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் செவ்வாய்க்கிழமை (10) மாலை 05.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறைக்கு வருகைதந்து இந்தக் குழுவை வரவேற்று அழைத்துச் சென்றது.