இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே, யாழ். பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 23 பேர் சார்பில் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.
கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராக எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தக்கூடிய நிலையில் வைத்திருந்தமை, அனுமதிப் பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்ததார்.
இந்திய மீனவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டத்தரணி ஜோய் மகாதேவாவும் ஆஜராகியிருந்தார்.