ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ் தலைமைகளின் இரட்டை நிலைப்பாடு ...!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பு நேற்று (23) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
மேற்படி சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து மீண்டும் தமக்கிடையில் ஒற்றுமையில்லை என்பதை அரசியல்தலைமைகள் மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
அதாவது, மாகாணசபை தேர்தல் குறித்தும் மற்றும் 13 ஆம் திருத்த சட்டத்தில் இல்லாமல் சென்ற அதிகாரங்கள் முழுமைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வேறுப்பட்ட நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஜெய்சங்கரிடம் ஒற்றையாட்சி குறித்து நான் மட்டுமே வலியுருத்தி இருந்தேன்.
இருப்பினும் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும் மாகாண சபை தேர்தல் குறித்தும் மாகாண சபை முறைமையில் 13 ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் திரும்ப திரும்ப கேட்டனரே தவிர ஒற்றை ஆட்சி நிராகரிப்பு குறித்தும் மற்றும் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்தும் வலியுருத்தவில்லை.
எழுத்து மூலமாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் ஆவணம் ஒன்றை தமிழரசுக் கட்சியினர் வழங்கியிருந்தனர்.
அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை இருப்பினும் சந்திப்பில் பேசப்பட்ட விதம் தமிழ் தேசியத்தில் சமஷ்டி குறித்து நிற்கும் எங்களை தனிமைப்படுத்துவதாகவே காணப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, இவர்கள் மாறி மாறி கருத்துக்களை ஒருமித்த நிலைப்பாடு இல்லாமல் தெரிவித்திருப்பது இந்தியாவிடம் தமிழ் மக்கள் விவகாரத்தில் அரசியல் தலைமைகளுக்கு தெளிவின்மையை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இது தொடர்பில் விவரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



