புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம் : இந்தியா ஆதரவு
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் (United States) நடவடிக்கையில் உடன்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (Donald Trump), பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் குறிப்பாக அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவிற்கான அகதிகள்
இதனடிப்படையில், அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
அத்தோடு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்போவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையில் உடன்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களில் இந்தியர்கள் இருந்தால் அவர்கள் இந்தியர்கள்தான் என்பது உறுதியானால் அவர்களுக்காக இந்தியாவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
இந்தியத் திறமைகள்
இந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இந்தியாவின் இந்த நிலைப்பாடு அமெரிக்காவுக்கு மட்டுமே பிரத்யேகமானது அல்ல.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள், எந்த நாடாக இருந்தாலும் அங்கே சட்டவிரோத குடியேற்றம் என்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடியது.
பல சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கக் கூடியது எனவே, ஓர் அரசாக நாங்கள் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.
அதேவேளையில், இந்தியத் திறமைகள் உலக அளவில் அதிகபட்ச வாய்ப்பை பெற வேண்டும் என விரும்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |