இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகிறார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது.
அத்துடன் இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர் வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் (Colombo) உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது .
இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதன்போது எரிசக்தி டிஜிட்டல் மயமாக்கல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக் கொள்ளப்பட உள்ளன.
இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள் ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5000 மெற்றிக் தொன் தம்புள்ளை களஞ்சிய வளாகத்தின் நிர்மாணம், 5000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்நிலை ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.
தொடருந்து பாதை திறப்பு
அதேபோல் இந்தியப் பிரதமர் அனுராதபுரம் மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ - அனுராதபுரம் தொடருந்து சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தொடருந்து பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்