சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்...
ஒக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகின்றோம்.
உரும்பிராய் பிரதேசத்தில் இந்தியப் படையினர் சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டும், குண்டு வீசிக்கொண்டும் தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால், அங்கிருந்த மக்கள் பயத்தினால் வீடுகளினுள்ளும், வேறு மறைவிடங்களிலும் மறைந்திருக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
அவ்வாறு மறைந்திருந்த பொதுமக்களால் சில விடயங்களை அவதானிக்கவும் முடிந்தது. உரும்பிராய் பிரதேசத்தைச் சுற்றிவழைத்திருந்த இந்தியப் படையினர் சிங்களப் பாஷையில் பேசிய அதிசயத்தை பல சந்தர்ப்பங்களில் அவர்களால் கேட்கமுடிந்தது. பொது மக்களுக்கோ ஆச்சரியம். அவர்களால் தங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை.
இந்திய இராணுவம் சிங்களம் பேசுவதா? ஏதாவது கனவு கினவு காண்கின்றோமா -என்று சந்தேகித்து பலர் தங்களைத் தாங்களே கிள்ளியும் பார்த்துக்கொண்டார்கள்.
பயத்தில் ஹிந்தியை சிங்களம் என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்டோமோ என்று கூட அவர்கள் சந்தேகப்பட்டார்கள். படிப்படியாகவே உண்மை நிலையை அவர்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது.
இந்தியப் படையினருடன் சிறிலங்காப் படையினரும் இணைந்து மனித வேட்டைக்கு வந்திருந்ததை அவர்களால் உணர முடிந்தது. இந்தியப் படையனருடன் இணைந்து சிறிலங்காப் படைவீரர்களும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதை யாழ் குடாவாசிகள் பலர் உறுதிப்படுத்தியிருந்தார்கள்.
முறிந்த பனை என்ற தொகுப்பு முதற்கொண்டு, இந்தியப்படையினரின் இராணு நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் பற்றி வெளியிடப்பட்ட பல புத்தகங்களிலும், இந்தியப் படையினருடன் சிறிலங்காப் படையினரும் இணைந்து செயற்பட்ட உண்மை உறுதிப்படுத்துப்பட்டிருந்தது.
சிறிலங்காப் படைகளை துணைக்கழைத்த இந்தியா
புலிகளுடனான சண்டைகள் இந்த அளவிற்கு மோசமானதும், கடினமானதுமாக இருக்கும் என்பதை, ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படையினர் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.
புலிகள் மிக இலகுவாக தமது வழிக்கு வந்துவிடுவார்கள் அல்லது புலிகள் இந்தியாவை மீறிச் செயற்படமாட்டார்கள் என்றே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.
ஒருவேளை புலிகளுடன் மோதவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட, ஓரிரு நாட்களுக்குள் புலிகளை முற்றாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே கணிப்பிட்டும் இருந்தார்கள்.
புலிகள் யுத்த முனையில் மிகவும் பலமான எதிர்ப்புக்களைக் காண்பித்து, இந்தியப் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி, இந்தியப் படையினரை எதுவுமே செய்யமுடியாத ஒரு வகை கையறு நிலைக்குள் கொண்டுவந்திருந்ததைத் தொடர்ந்து, யாழ்பாணத்தில் தங்கியிருந்த சிறிலங்காப் படையினரின் உதவியையும் பெறுவதற்கு இந்தியப்படைத்துறைத் தலைமை தீர்மாணித்தது.
இந்திய இராணுவத் தலைமையின் ஆலோசனையின்படி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, சிறிலங்காவின் அதிபர் ஜே.ஆர். இடம் சிறிலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பை கோரியிருந்தார்.
சந்தர்ப்பம் பார்த்திருந்த சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகவே இதற்குச் சம்மதித்தது. சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்துலத் முதலி யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினருக்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.
புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அந்த அவசரச் செய்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி சிறிலங்காப் படைகளின் ஒத்துழைப்புக்கள் மிகவும் இரகசியமாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த ஷஒப்பரரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கைகளுக்கு என்று தயார்படுத்தப்பட்டிருந்த சிறிலங்காப் படையணிகள் இந்தியப் படையினருடன் இணைந்து களம் இறக்கப்பட்டன.
இந்தியப் படையினரின் யாழ் நகர் நோக்கிய நகர்வுகளுக்கு சிறிலங்காப் படையினர் வழிகாட்டிகளாகவும், துணைப் படையினராகவும் பணியாற்றி ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
ஒப்பரேஷன் லிபரேசன் படைநகர்வுகளுக்கு என்று தயாரிக்கப்பட்டிருந்த யாழ் வீதிகள் தொடர்பான வரைபடங்களையும், இந்தியப் படையினரின் நகர்வுகளுக்கு சிறிலங்காப் படையினர் கொடுத்துதவினார்கள்.
யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் யாழ் குடாவிலுள்ள குடியிருப்புக்களை நோக்கி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டும், சிறிலங்கா விமானப் படையினரின் ஹெலிக்காப்டர்கள் புலிகளின் இலக்குகள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்கள் மீது குண்டு வீச்சுக்கள் நடாத்தியும் இந்தியப் படையினரின் ஒப்ரேசன் பவான் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்.
சாட்சிகள்
இலங்கை வானொலியில் மிகவும் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரேடியோ நடராஜா. அவர் அப்பொழுது யாழ்பாணத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். மற்றத் தமிழ் மக்கள் போலவே அவரும் இந்தியா மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த ஒரு நபர். இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட போது, அவர்களுடன் பேசிச் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தனது வீட்டில் தங்கியிருந்தார்.
அங்கிருந்த மற்றவர்களிடமும் இதனைக் கூறி, அவர்களையும் அசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார். இந்தியப் படையினர் அவரது வீட்டினுள் நுழைந்தபோது இந்தியப் படையினருடன் பேசி விளங்கப்படுத்துவதற்காக வாசலுக்குச் சென்றார். இந்தியப் படையினர் அவரை விசாரித்தார்கள்.
தனது மகனும் மனைவியும் தன்னுடன் இருப்பதாகத் தெரிவித்த அவர், தனது மகனையும், மனைவியையும் வாசலுக்கு வரும்படி அழைத்தார்.
வீட்டினுள் இருந்த மகன் வெளியே வருவதற்காக எழுந்து நின்று சட்டை அணிந்துகொள்ள முற்படுவதை ஜன்னல் வழியாகக் கண்ட ஒரு சிப்பாய், தனது துப்பாக்கி முனையை ஜன்னலினுள்ளே செலுத்தி சுடத் தொடங்கினான்.
நடராஜாவின் மகன் தரையில் விழுந்து படுத்துவிட்டதால் துப்பாக்கிச் சன்னங்கள் எதுவும் அவன் மீது படவில்லை. அதேவேளை வாசலில் இந்தியப் படையினருடன் பேசிக்கொண்டிருந்த நடராஜா மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அவர் பிணமாக வீழ்ந்தார். வாசலிலும், வீட்டினுள்ளேயும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதையும், தனது கணவர், மகன் இருவரும் தரையில் வீழ்ந்ததையும் கண்ட நடராஜாவின் மனைவி, இருவருமே கொல்லப்பட்டுவிட்டதாக நினைத்து பயத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓட ஆரம்பித்தார்.
அவர் பின்பக்கம் வேலி வழியாக தப்பி ஓடவதைக்கண்ட ஒரு சிப்பாய் கத்தினான்: பஸ்சங் கியா (பின்னால் ஓடுகிறார்) என்று அவன் சிங்களத்தில் கத்தியதுதான், இந்தியப் படையினருடன் சிங்களப் படையினரும் இணைந்து வந்திருந்தார்கள் என்பதற்கான முதல் அறிகுறி. அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சாந்தி என்பவர் தனது மகனுடன் விடுமுறைக்கு வந்திருந்தார்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் யாழ்ப்பாணம் வந்து, உரும்பிராயில் தங்கியிருந்தார்.
16ம் திகதி அப்பிரதேசத்தில் தொடர்ந்து முழங்கிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தினால் அச்சமுற்ற அவர்கள் வீட்டினுள் பதுங்கியபடி அந்த இரவைக் கழித்தார்கள்.
மறு நாள் காலை துப்பாக்கிச் சூட்டு ஒலிகள் சற்று ஓய்ந்ததைத் தொடர்ந்து நிலமையைப் பார்ப்பதற்காக அவர் கதவைத்திறந்து கொண்டு வெளியே செல்ல நினைத்தார்.
கதவை மெதுவாகத் திறந்து வெளியே செல்ல எத்தனித்த போது, அவரை முந்திக்கொண்ட அவரது வளர்ப்பு நாய், ஓரளவு திறந்த கதவு வழியாக வெளியே பாய்ந்தது.
குரைத்தபடி சென்ற நாயை நோக்கி பல முனைகளில் இருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ஓலத்துடன் நாய் சுருண்டு விழுந்தது. அப்பொழுதுதான் அவரது வீட்டின் அருகே ஒரு கவச வாகனம் நின்றுகொண்டிருப்பதை சாந்தி அவதானித்தார்.
உடனே வீட்டின் கதவை இறுக அடைத்துவிட்டு தனது மகனையும் இழுத்துக்கொண்டு மீண்டும் வீட்டினுள் ஒரு பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக்கொண்டார்.
அந்தச் சமயத்தில், வெளியில் சில சிப்பாய்கள் சிங்களத்தில் பேசியது அவரது காதில் விழுந்தது, மே பரன கெதர. கடாண்ட ஹறி அமாறு. மோட்டார் எக்க உஸ்ஸாண்ட (இது பழைய வீடு. உடைப்பது கஷ்டம். ஒரு மோட்டார் அடி) ஆனால் தெய்வாதீனமாக அந்த வீட்டிற்கு எதுவும் நடைபெறவில்லை.
இதேபோன்று, யாழ் குடாவில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சிறிலங்காப் படையினர் ஒத்துழைப்பு வழங்கியதுடன், நேரடியாக பங்குகொண்டும் இருந்ததற்காக பல ஆதாரங்கள் பின்னர் வெளியாகி இருந்தன.
தமது இராணுவ நடவடிக்கைகளின் போது சிறிலங்காப் படையினர் உதவியது பற்றி இந்தியப் படை அதிகாரிகள் எழுதியிருந்த பல புத்தகங்களிலும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு இந்தியப் படையினர் சிறிலங்காப் இராணுவம் என்ற பேயிடமே உதவி பெற்றிருந்ததானது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா இழைத்த மிகப் பெரிய துரோகம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |